Wednesday, September 24, 2008

லஞ்சம் வாங்கலையோ லஞ்சம் ..

  • அல்பேனியா - பல நூறு வருட அந்நிய ஆட்சி, கம்யூனிசம் என்ற பெயரால் இரும்புக்கரங்களால் நெருக்கப்பட்டு, கடந்த இருபது வருடங்களாக பொருளாதாரச்சீரழிவு, சமுதாயக்கிளர்ச்சி, போர், அகதிகள்
  • மடகஸ்கார் - வருமை, அரசியல் நிலையின்மை, ரெண்டே கோடி மக்கள், குட்டித்தீவு நாடு
  • செர்பியா மற்றும் மொண்டேநேக்ரோ - முதல், இரண்டாம் உலகப்போர்களால் சீரழிந்த நாடுகள் , யுகோஸ்லோவியா தீபகற்பம் உடைந்தபோது உருவான சிறிய நாடுகள் , 2006 இல் இரண்டாக பிரிந்த நாடுகள். போர், இனத்தகராறு என்று இன்னும் போராடும் நாடுகள்
  • பனாமா - 33 லட்சம் பேர் வாழும் சிறிய மத்திய அமேரிக்க நாடு. மூன்று முறை மூன்று வேவீறு நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்ற நாடு. சொந்தமாக நாணயங்களும் அமேரிக்க டாலர் நோட்டுகள் புழங்கும் நாடு.
  • செனெகல் - போர், உள்நாட்டு சண்டை, பிரிவினைவாதிகள், வறுமை நிலவும் ஆபிரிக்க நாடு
இந்த நாடுகளை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்...இத்தனை பிரச்சனை இருந்தும் இவை உலகநாடுகளில் லஞ்சம் புழங்கும் (கணிப்பு) வரிசையில் 85 ஆவது மோசமான இடத்தில் உள்ளன.

அட மறந்துட்டேன், இதே இடத்தில் இவற்றோடு நம்ம இந்தியாவும். போன வருஷத்தை ஒப்பிட்டு பார்த்தா ஒரு 13 இடம் கீழே ( மோசம்) .அதுல தமிழகம் முன்னேறிய மாநிலங்களிலேயே மோசமான நிலை.

இதுல கொடுமை என்னன்னா...புதுசா ஒன்னும் இல்லை....அதிகமாக இந்தியாவில் லஞ்சம் கொடுக்கவேண்டிய இடங்கள்.....

  1. ரேஷன் கடை - கார்டு வாங்க, பொருள் வாங்க, அட்ரஸ் மாற்ற (ச்சே), உறுப்பினர்கள் சேர்க்க
  2. ஹாஸ்பிடல் - பெட், ஆராய்ச்சி, மருந்து, ஆபரேஷன், சர்டிபிகேட், ரத்தம்
  3. பள்ளிக்கல்வி - அட்மிசன், சர்டிபிகேட், பதிவு, ஸ்காலர்சிப், ஹாஸ்டேல் இடம்
  4. மின்சாரம், தண்ணீர் - புது இணைப்பு, மீட்டர் ரிப்பேர், பில், மீட்டர் இணைப்பு, விவசாய இணைப்பு, பில் குறைக்க
இன்னும் சொல்ல என்ன இருக்கு....என்ன பண்றதுன்னு தெரியலை - கோவமா, ஏக்கமா, எதிர்பார்ப்பா, கவலையா, பயமா.....வளரும் பாரதம் எல்லாம் இருக்க எங்கயோ ஒரு மூலைல இந்த செய்திய பார்க்கும்போது கொஞ்சம் வலிக்குது.....கடமைய செய்ய லஞ்சம்.....நானும் ஒரு குற்றவாளி..

Wednesday, September 10, 2008

டெட்ராய்ட் நகரத்து மின்மினிகள்

"என்னடா ரெண்டு தோசையோட எந்திரிசிட்டே"
" அம்மா, சுந்தர் காளான் ட்ரீட் குடுத்தான்மா" ( அந்த அரை ப்ளேட் அவன் செலவுல திங்க நம்ம பட்ட கஷ்டம் நமக்குத்தான் தெரியும்)
"கண்டத தின்னுகிட்டு...சரி சரி தட்ட எடுத்திட்டு வந்து கழுவுற எடத்துல போடு...."

கைய பேண்டல தொடைச்சிக்கிட்டு மெதுவா பின் பக்கமா எஸ்கேப் ஆகலாம்ன்னா,
திடீர்னு தூர்தர்ஷன், நரசிம்ம ராவ் புரியாத ஹிந்தில பேசறத தமிழ் நியுஸ் நடுவுல காமிக்க ....அந்த கேப்பே நிரப்ப அப்ஸ் நம்ம பக்கம் திரும்பி

"ஏண்டா ...எப்போ அரைப்பரிட்சை...."
"இன்னும் சொல்லலேப்பா"

"டேய், எங்கடா"
"இல்லப்பா.. இங்கதான் "

"ராத்திரி எல்லாம் அரட்டை அடிக்கறது, அப்புறம் காலைல இழுத்து போத்திட்டு தூங்கறது, போய் ஏதாவது படிக்கறது, அந்த புஸ்தகத்தை தெறந்து பார்த்தாதான் என்ன ?"

இன்னிக்கு விட மாட்டார்.... நரசிம்ம ராவ் , நல்ல இருய்யா! ....போச்சு இன்னிக்கு...

முனுமுனுத்துக்கொண்டே புக்கை தெறந்தா எல்லாம் புதுசா இருக்கும்...

"டேய், என்னடா பிச்சைக்காரன் பாத்திரத்தை வச்சிருக்க மாதிரி புஸ்தகத்தை தெறந்து வச்சிட்டு உக்காந்திருக்கிற.."

கடுப்பு தலைக்கு ஏற."அம்மா, அம்மா, நான் தூங்க போறேன்"
பாயை வாரி சுருட்டிக்கொண்டு வ்ராந்தாவில் போய் போட்டு சின்னதா நைட் லாம்பை எரிய விட்டு குப்புற படுக்கும் நான்.. ( மூணு ரூம் சந்து வீட்டில், வராந்தாதான் நம்ம ரூம்)..

கோவம் தலைக்கு ஏறி தலை வெடித்துவிடும் நெலமை....என்ன நெனசிட்டிருக்காரு இவரு....ஒரு நாள் பாரு..... எட்டாம் கிளாஸ் படிக்கறேன்.....கிளாஸ் லீடர்.. நான் மத்த பசங்க மாதிரி வேலை கெட்ட வேளைல ஊரு சுத்திட்டா இருக்கேன்....ஏதோ சும்மா காம்பௌண்ட் மக்களோட கொஞ்ச நேரம் பேசலாம்ன்னா....

எப்போ கோவம் தலைவலியா மாறி...தலைவலி தூக்கமருந்த மாறி....தூங்கிப்போனேன்னு தெரியல...

ராத்திரி ஒரு 1 மணி இருக்கும்...திடீர்ன்னு முழிப்பு வர.....ரெண்டு தோசை அவசர அவசரமா தின்னதுல தொண்டை வறண்டு போய் தண்ணி தண்ணின்னு எழுப்பி விட்டுருச்சு....இருட்ல ரெண்டு பெரும் ( அதான் அப்ஸும் அம்மாவும் ) ஏதோ பேசும் சத்தம்....

கொஞ்சம் சுதாரிச்சு என்ன தான் பேசறாங்கன்னு கேட்கலாம்ன்னு...

"என்ன PF லோன் போட்ரட்டுமா...."
"அதையும் போட்டுட்டா அப்புறம் மிச்சம் என்ன வரும்"
"இப்போ என்ன பண்ண சொல்ற.....வர்ரது வரும்" (அப்ஸ் கொரல் கொஞ்சம் உசர)
"சரி, மெதுவா, பசங்க எந்திரிக்க போறாங்க"
"எந்திரிக்கட்டும், பெரியவன் எப்போ தான் கஷ்டம் தெரிஞ்சுக்க போறான்" (சத்தம் குறைந்து சன்னமாக)
அம்மா சிரித்துகொண்டு ( அந்த சிரிப்பு பாஷையில் அக்கறைய பாரு என்று அர்த்தம் போல)
"சரி, சொல்லுங்க, எவ்ளோ வரும்"
"நாலாயிரம், இவன் பீஸும் சின்னவன் ஸ்கூல் செலவும் போக தீபாவளி சீட்டு ஒன்னுல சேந்துரலாம். போன வருஷமே, வெடி கம்மியா இருந்துதுன்னு சொன்னானுங்க"
"நீங்க வேற கண்டத வாங்காதீங்க , பெரியவன் ஏதோ friend வீட்டுக்கு வால்பாறைக்கு போறானாம் இந்த தீபாவளிக்கு"
"இப்போவே அவரு தீபாவளிக்கு வீட்ல இருக்க மாட்டாராமா"
"அட, அவன் friend வெள்ளை மோகன்ராஜ் வீட்டுக்குத்தாங்க, நல்ல பசங்க, நம்ம வீட்டுக்கு வர பசங்கதான்"
"ப்பச், நான் அத சொல்லலை, பசங்கள பத்தி ஏதாவது சொன்னேனா" ( அட, பார்ரா !); ஏதோ கிளாஸ் லீடராமே"
"ஆமாங்க, அசெம்பிலீள முதல் ஆளாம், கேட்டா , கடியான வேலைம்மாங்கறான்"
அட, அப்ஸ் சிரிப்பு! அப்புறம் கொஞ்சம் நேரம் சத்தமே காணோம்....அப்புறம் ஒரு பெருமூச்சு...."சரி...தூங்குங்க...பசங்கள பத்தி பேச ஆரம்பிச்சா நிறுத்தமாட்டீங்களே, நாளைக்கு டே ஷிப்டு....."
திடீர்ன்னு என்னவோ, அவங்களுக்கு ஒரு சத்தம் குடுத்துட்டு எந்திரக்கனும்ன்னு தோனுச்சு..கைய லேசா டேபிள்ல தட்டிட்டு எந்திருச்சு போய் தண்ணிய குடிச்சிட்டு வந்து படுத்தேன்...

அட நம்மள பத்தி தான் பேசறாங்க.....தீபாவளிக்கு நெறைய பட்டாசு....அதே சமயம் மோகன்ராஜ் வீட்டுக்கு போறது கஷ்டம்... எல்லாத்துக்கும் நடுவுல திடீர்ன்னு .....அவங்க கனவு புரிஞ்சுது....நம்மதான் வருங்காலம்....

ரெண்டு வாரம் முன்னாடி திருப்பியும் சட்டிய தூக்க சொல்லிட்டாங்க.....இந்த தடவை கண்டம் விட்டு கண்டம்....வந்த எடத்துல ( அமெரிக்கா வடக்குல டெட்ராய்ட் நகரம்) ஒரு நண்பர் மூலமா ஒரு இரவு நாலே பேர் ஒக்கார்ற ஒரு சின்ன விமானத்துல பயணம்....டெட்ராய்ட் 50-60 கள்ல உலகத்துக்கே மோட்டார் வாகனத்த தந்த ஊரு....இன்னிக்கு அந்த புகழ் மறைஞ்சு.....அடிபட்டு ...மெதுவா எந்திரிச்சு நிக்க கஷ்டபட்டுகிட்டிருக்க நகரம்......காலி கட்டடங்களும்...பாதி எரிந்த வீடுகளும் சில இடங்கள் அமெரிக்காவா இதுன்னு நெனைக்க வெக்கற எடம்....ஆனா அன்னைக்கு நைட்....8000 அடி உயரத்துல இருந்து பார்க்கும்போது அந்த பகலின் கோரம் மறைஞ்சு ...அழகா....அங்கங்கே மின்னும் விளக்குகளோட .....இதோ நாந்தான் டெட்ராய்ட்.......பாரு...ஒவ்வொரு வீட்டு மேலயும் மின்னும் விளக்கு.....திடீர்ன்னு 14 வருஷம் முன்னாடி அந்த நைட் ஏனோ ஞாபகம் வந்துது.....அப்பாவும் அம்மாவும் அடைகாத்த கனவு தான் ....அதே போல ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் வருங்காலத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் கணவன் மனைவியின் கனவுகள்தான் அந்த வீட்டின் மேல் மின்னிக்கொண்டிருக்கிறதோ......ஒவ்வொரு கனவும் உயிர்பெற்று மின்மினியாக பறக்க வேண்டும்....அணையாமல்.....