Saturday, November 8, 2008

ஒரு பதிவின் மரணம்.....

.நீண்ட நாளாக இந்த பதிவை முறையாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.....என் கடந்த பதிவிற்கு பிறகு பல முறை எப்பொழுதோ அகராதியில் ஒளித்து வைத்த மயிலிறகை தடவி பார்ப்பது போல் வந்து போயிருக்கிறேன்...இதோ இன்று அந்த மயிலிறகை என் நினைவுத்தோட்டத்தில் புதைக்கிறேன்.....பதிவெழுத கதையோ...காரணமோ...கருத்தோ இருந்தால் மட்டும் போதாது .....நெறியும் வேண்டும் என்று தெரிந்த விஷயம் தெளிவானது....கோடுகள் வரைய நினைத்து புள்ளிகளுடன் நின்று போன என் பல முயற்சிகளில் இதோ இன்று இந்த இரு பரிமாண இணைய உறவும்.... .....எழுதிய நாட்களில் வந்து வாழ்த்திய நண்பர்க்கு நன்றி....இதோ பாதி எழுதிய ஒரு பதிவு.......

"ஸ்கோர் என்னங்க? "

நம்மை பார்க்காமலே tv மேல் வைத்த கண் மாறாமல் ஒரு எரிச்சலோட... "133 இக்கு 4 விக்கெட்...." குதிகாலில் நின்று எம்பி பார்க்க முயன்றுகொண்டிருந்த வெள்ளை சட்டை நபர்...

மனிதரின் எரிச்சலுக்கு காரணம் புரிந்ததும்...மெதுவா அகரம் சக்லைனிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது......மெதுவா...ஒரு பெருமூச்சுடன் ( இந்த பெருமூச்சு தான் நானும் ஒரு விசிறி என்று நம்மை நண்பரின் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி ஒரு பரஸ்பரத்தை உருவாக்கியதுன்னு இப்போ புரியுது) ....யார் ஆடறாங்க.....

அசாரும் ஆம்றேயுங்க.....அந்த 'ங்க' உண்டான பரஸ்பரத்தை உறுதிப்படுத்தும்....

நம்ம சைலண்டாயி மேட்சை கவனிக்க....அடுத்த விளம்பர இடைவேளையில்......"நல்லாதாங்க ஆடிகிட்டு இருந்தாங்க, சித்துவும் சச்சினும், திடீர்ன்னு அடிக்க பார்த்து சித்து பவுண்டரி கிட்ட கேட்ச் குடுத்து அவுட், அடுத்த ஓவர்லையே சச்சின் எட்ஜ் வாங்கி அவுட்டுங்க....ச்சே"

நம்மளும் வழக்கமான "அது எப்பயுமா சனியன் அப்படிதான்....ரெண்டுல ஒருத்தர் அவுட் ஆயிட்டா...அடுத்த ஆளும் அவுட்டு ஆயிருவாங்க....பிப்டி கிப்டி போட்டாங்களா"

ரெண்டு பெரும் TV யையே பார்த்துகொண்டு இருக்கிறோம்....வழக்கமான ரெண்டு விளம்பரத்தை தாண்டி....தாடி வைத்த மந்திரவாதி "சப்னா" என்று கத்திக்கொண்டு பிளாஸ்டிக் பாயில் பறந்து கொண்டிருக்கிறார்...

"ட்ரிங்க்ஸ் போல" நண்பரிடமிருந்து......அப்போது தான் கோமாவில் இருந்து விழித்த நோயாளி போல....ஒரு வித "இவ்ளோ நேரம் கேக்காததுக்கு மன்னிச்சிருங்க" தொனியில், "எவ்ளோ ஓவருங்க ஆச்சு"...

"32 ஓவருங்க, அவுனுங்க கடைசி ஆள் வரைக்கும் காட்டனுங்க, ஒரு 250 போட்டாதான் சமாளிக்க முடியும்" நண்பர்...

மந்திரவாதி ரெண்டு முறை வந்து போய்விட்டார்...ஆட்டம் துவங்கியபாடில்லை....சின்ன பையன் ஒருத்தன் கும்பகர்ண சைஸ் பூரிக்கும் சமொசவுக்கும் இடையில் பல்டி அடித்துகொண்டிருந்தான்.....

"எங்கேங்க.....போன தடவை 265 போட்டும்....48 ஓவர்லையே அடிச்சிட்டாங்களே" .....எதிரணியை "ங்க" போடுவது யார் என்று நானும் வெள்ளை சட்டையும் பார்க்க...முழுக்கை சட்டையை இன் செய்து சூ போட்டிருந்த இன்னொரு பார்வையாளர்......

எங்கே நாங்கள் இவன் சரியான கருநாக்கு ஆளா இருப்பான் போலன்னு நினைத்துவிடுவோமா என்று....." இன்னிக்கு அந்த பன்னேர்ஜீயோ, சட்டேர்ஜீயோ...அவன தூக்கிட்டு...ஸ்ரீநாத்தை கொண்டு வந்திருக்காங்க.......பையன் நல்லா வெஸ்ட் இண்டீஸ் போவ்லேர் மாதிரி போடறான்...." டாபிக்கை மாத்தினார்.....

90 களின் ஆரம்பத்தில் நாங்கள் காந்திபுரத்தில் குடியிருந்தோம்.....அறியாதவர்க்கு காந்திபுரம் கோவையின் பிரபல ஷாப்பிங் ஏரியாக்களில் ஒன்று.....கிராஸ் கட் ரோடு அதன் பிரதான வீதி.......

கிரிக்கெட் மேட்ச் நடக்கும் நாட்களில்....."

Wednesday, September 24, 2008

லஞ்சம் வாங்கலையோ லஞ்சம் ..

  • அல்பேனியா - பல நூறு வருட அந்நிய ஆட்சி, கம்யூனிசம் என்ற பெயரால் இரும்புக்கரங்களால் நெருக்கப்பட்டு, கடந்த இருபது வருடங்களாக பொருளாதாரச்சீரழிவு, சமுதாயக்கிளர்ச்சி, போர், அகதிகள்
  • மடகஸ்கார் - வருமை, அரசியல் நிலையின்மை, ரெண்டே கோடி மக்கள், குட்டித்தீவு நாடு
  • செர்பியா மற்றும் மொண்டேநேக்ரோ - முதல், இரண்டாம் உலகப்போர்களால் சீரழிந்த நாடுகள் , யுகோஸ்லோவியா தீபகற்பம் உடைந்தபோது உருவான சிறிய நாடுகள் , 2006 இல் இரண்டாக பிரிந்த நாடுகள். போர், இனத்தகராறு என்று இன்னும் போராடும் நாடுகள்
  • பனாமா - 33 லட்சம் பேர் வாழும் சிறிய மத்திய அமேரிக்க நாடு. மூன்று முறை மூன்று வேவீறு நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்ற நாடு. சொந்தமாக நாணயங்களும் அமேரிக்க டாலர் நோட்டுகள் புழங்கும் நாடு.
  • செனெகல் - போர், உள்நாட்டு சண்டை, பிரிவினைவாதிகள், வறுமை நிலவும் ஆபிரிக்க நாடு
இந்த நாடுகளை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்...இத்தனை பிரச்சனை இருந்தும் இவை உலகநாடுகளில் லஞ்சம் புழங்கும் (கணிப்பு) வரிசையில் 85 ஆவது மோசமான இடத்தில் உள்ளன.

அட மறந்துட்டேன், இதே இடத்தில் இவற்றோடு நம்ம இந்தியாவும். போன வருஷத்தை ஒப்பிட்டு பார்த்தா ஒரு 13 இடம் கீழே ( மோசம்) .அதுல தமிழகம் முன்னேறிய மாநிலங்களிலேயே மோசமான நிலை.

இதுல கொடுமை என்னன்னா...புதுசா ஒன்னும் இல்லை....அதிகமாக இந்தியாவில் லஞ்சம் கொடுக்கவேண்டிய இடங்கள்.....

  1. ரேஷன் கடை - கார்டு வாங்க, பொருள் வாங்க, அட்ரஸ் மாற்ற (ச்சே), உறுப்பினர்கள் சேர்க்க
  2. ஹாஸ்பிடல் - பெட், ஆராய்ச்சி, மருந்து, ஆபரேஷன், சர்டிபிகேட், ரத்தம்
  3. பள்ளிக்கல்வி - அட்மிசன், சர்டிபிகேட், பதிவு, ஸ்காலர்சிப், ஹாஸ்டேல் இடம்
  4. மின்சாரம், தண்ணீர் - புது இணைப்பு, மீட்டர் ரிப்பேர், பில், மீட்டர் இணைப்பு, விவசாய இணைப்பு, பில் குறைக்க
இன்னும் சொல்ல என்ன இருக்கு....என்ன பண்றதுன்னு தெரியலை - கோவமா, ஏக்கமா, எதிர்பார்ப்பா, கவலையா, பயமா.....வளரும் பாரதம் எல்லாம் இருக்க எங்கயோ ஒரு மூலைல இந்த செய்திய பார்க்கும்போது கொஞ்சம் வலிக்குது.....கடமைய செய்ய லஞ்சம்.....நானும் ஒரு குற்றவாளி..

Wednesday, September 10, 2008

டெட்ராய்ட் நகரத்து மின்மினிகள்

"என்னடா ரெண்டு தோசையோட எந்திரிசிட்டே"
" அம்மா, சுந்தர் காளான் ட்ரீட் குடுத்தான்மா" ( அந்த அரை ப்ளேட் அவன் செலவுல திங்க நம்ம பட்ட கஷ்டம் நமக்குத்தான் தெரியும்)
"கண்டத தின்னுகிட்டு...சரி சரி தட்ட எடுத்திட்டு வந்து கழுவுற எடத்துல போடு...."

கைய பேண்டல தொடைச்சிக்கிட்டு மெதுவா பின் பக்கமா எஸ்கேப் ஆகலாம்ன்னா,
திடீர்னு தூர்தர்ஷன், நரசிம்ம ராவ் புரியாத ஹிந்தில பேசறத தமிழ் நியுஸ் நடுவுல காமிக்க ....அந்த கேப்பே நிரப்ப அப்ஸ் நம்ம பக்கம் திரும்பி

"ஏண்டா ...எப்போ அரைப்பரிட்சை...."
"இன்னும் சொல்லலேப்பா"

"டேய், எங்கடா"
"இல்லப்பா.. இங்கதான் "

"ராத்திரி எல்லாம் அரட்டை அடிக்கறது, அப்புறம் காலைல இழுத்து போத்திட்டு தூங்கறது, போய் ஏதாவது படிக்கறது, அந்த புஸ்தகத்தை தெறந்து பார்த்தாதான் என்ன ?"

இன்னிக்கு விட மாட்டார்.... நரசிம்ம ராவ் , நல்ல இருய்யா! ....போச்சு இன்னிக்கு...

முனுமுனுத்துக்கொண்டே புக்கை தெறந்தா எல்லாம் புதுசா இருக்கும்...

"டேய், என்னடா பிச்சைக்காரன் பாத்திரத்தை வச்சிருக்க மாதிரி புஸ்தகத்தை தெறந்து வச்சிட்டு உக்காந்திருக்கிற.."

கடுப்பு தலைக்கு ஏற."அம்மா, அம்மா, நான் தூங்க போறேன்"
பாயை வாரி சுருட்டிக்கொண்டு வ்ராந்தாவில் போய் போட்டு சின்னதா நைட் லாம்பை எரிய விட்டு குப்புற படுக்கும் நான்.. ( மூணு ரூம் சந்து வீட்டில், வராந்தாதான் நம்ம ரூம்)..

கோவம் தலைக்கு ஏறி தலை வெடித்துவிடும் நெலமை....என்ன நெனசிட்டிருக்காரு இவரு....ஒரு நாள் பாரு..... எட்டாம் கிளாஸ் படிக்கறேன்.....கிளாஸ் லீடர்.. நான் மத்த பசங்க மாதிரி வேலை கெட்ட வேளைல ஊரு சுத்திட்டா இருக்கேன்....ஏதோ சும்மா காம்பௌண்ட் மக்களோட கொஞ்ச நேரம் பேசலாம்ன்னா....

எப்போ கோவம் தலைவலியா மாறி...தலைவலி தூக்கமருந்த மாறி....தூங்கிப்போனேன்னு தெரியல...

ராத்திரி ஒரு 1 மணி இருக்கும்...திடீர்ன்னு முழிப்பு வர.....ரெண்டு தோசை அவசர அவசரமா தின்னதுல தொண்டை வறண்டு போய் தண்ணி தண்ணின்னு எழுப்பி விட்டுருச்சு....இருட்ல ரெண்டு பெரும் ( அதான் அப்ஸும் அம்மாவும் ) ஏதோ பேசும் சத்தம்....

கொஞ்சம் சுதாரிச்சு என்ன தான் பேசறாங்கன்னு கேட்கலாம்ன்னு...

"என்ன PF லோன் போட்ரட்டுமா...."
"அதையும் போட்டுட்டா அப்புறம் மிச்சம் என்ன வரும்"
"இப்போ என்ன பண்ண சொல்ற.....வர்ரது வரும்" (அப்ஸ் கொரல் கொஞ்சம் உசர)
"சரி, மெதுவா, பசங்க எந்திரிக்க போறாங்க"
"எந்திரிக்கட்டும், பெரியவன் எப்போ தான் கஷ்டம் தெரிஞ்சுக்க போறான்" (சத்தம் குறைந்து சன்னமாக)
அம்மா சிரித்துகொண்டு ( அந்த சிரிப்பு பாஷையில் அக்கறைய பாரு என்று அர்த்தம் போல)
"சரி, சொல்லுங்க, எவ்ளோ வரும்"
"நாலாயிரம், இவன் பீஸும் சின்னவன் ஸ்கூல் செலவும் போக தீபாவளி சீட்டு ஒன்னுல சேந்துரலாம். போன வருஷமே, வெடி கம்மியா இருந்துதுன்னு சொன்னானுங்க"
"நீங்க வேற கண்டத வாங்காதீங்க , பெரியவன் ஏதோ friend வீட்டுக்கு வால்பாறைக்கு போறானாம் இந்த தீபாவளிக்கு"
"இப்போவே அவரு தீபாவளிக்கு வீட்ல இருக்க மாட்டாராமா"
"அட, அவன் friend வெள்ளை மோகன்ராஜ் வீட்டுக்குத்தாங்க, நல்ல பசங்க, நம்ம வீட்டுக்கு வர பசங்கதான்"
"ப்பச், நான் அத சொல்லலை, பசங்கள பத்தி ஏதாவது சொன்னேனா" ( அட, பார்ரா !); ஏதோ கிளாஸ் லீடராமே"
"ஆமாங்க, அசெம்பிலீள முதல் ஆளாம், கேட்டா , கடியான வேலைம்மாங்கறான்"
அட, அப்ஸ் சிரிப்பு! அப்புறம் கொஞ்சம் நேரம் சத்தமே காணோம்....அப்புறம் ஒரு பெருமூச்சு...."சரி...தூங்குங்க...பசங்கள பத்தி பேச ஆரம்பிச்சா நிறுத்தமாட்டீங்களே, நாளைக்கு டே ஷிப்டு....."
திடீர்ன்னு என்னவோ, அவங்களுக்கு ஒரு சத்தம் குடுத்துட்டு எந்திரக்கனும்ன்னு தோனுச்சு..கைய லேசா டேபிள்ல தட்டிட்டு எந்திருச்சு போய் தண்ணிய குடிச்சிட்டு வந்து படுத்தேன்...

அட நம்மள பத்தி தான் பேசறாங்க.....தீபாவளிக்கு நெறைய பட்டாசு....அதே சமயம் மோகன்ராஜ் வீட்டுக்கு போறது கஷ்டம்... எல்லாத்துக்கும் நடுவுல திடீர்ன்னு .....அவங்க கனவு புரிஞ்சுது....நம்மதான் வருங்காலம்....

ரெண்டு வாரம் முன்னாடி திருப்பியும் சட்டிய தூக்க சொல்லிட்டாங்க.....இந்த தடவை கண்டம் விட்டு கண்டம்....வந்த எடத்துல ( அமெரிக்கா வடக்குல டெட்ராய்ட் நகரம்) ஒரு நண்பர் மூலமா ஒரு இரவு நாலே பேர் ஒக்கார்ற ஒரு சின்ன விமானத்துல பயணம்....டெட்ராய்ட் 50-60 கள்ல உலகத்துக்கே மோட்டார் வாகனத்த தந்த ஊரு....இன்னிக்கு அந்த புகழ் மறைஞ்சு.....அடிபட்டு ...மெதுவா எந்திரிச்சு நிக்க கஷ்டபட்டுகிட்டிருக்க நகரம்......காலி கட்டடங்களும்...பாதி எரிந்த வீடுகளும் சில இடங்கள் அமெரிக்காவா இதுன்னு நெனைக்க வெக்கற எடம்....ஆனா அன்னைக்கு நைட்....8000 அடி உயரத்துல இருந்து பார்க்கும்போது அந்த பகலின் கோரம் மறைஞ்சு ...அழகா....அங்கங்கே மின்னும் விளக்குகளோட .....இதோ நாந்தான் டெட்ராய்ட்.......பாரு...ஒவ்வொரு வீட்டு மேலயும் மின்னும் விளக்கு.....திடீர்ன்னு 14 வருஷம் முன்னாடி அந்த நைட் ஏனோ ஞாபகம் வந்துது.....அப்பாவும் அம்மாவும் அடைகாத்த கனவு தான் ....அதே போல ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் வருங்காலத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் கணவன் மனைவியின் கனவுகள்தான் அந்த வீட்டின் மேல் மின்னிக்கொண்டிருக்கிறதோ......ஒவ்வொரு கனவும் உயிர்பெற்று மின்மினியாக பறக்க வேண்டும்....அணையாமல்.....

Friday, August 15, 2008

தங்க மகன்

அட தலைவர் படம் இல்லீங்க....நம்ம அபினவ் பிந்த்ரா பற்றி. எதேட்சையா அவரோட blog கண்ணில் பட்டுது. எல்லாரும் ராஜ்யவர்தன் சிங் ராதோரை கவனிபிக்கிட்டு இருந்தப்போ, கேப்ல கடா வெட்டன (சுட்ட?) மனிதர். ஒரு பெரிய வியாபாரக்காந்தத்தோட மகன். மனுஷன் நம்மள மாதிரி தீடீர்னு ஒரு நாள் பெயிஜிங் போனதும் ஒரு Blog தட்டி விட்டிருக்கிறார் ( நம்மள மாதிரி பெயிஜிங் போனப்ப இல்லீங்க, நம்மள மாதிரி திடீர்னு!). ஒரு சாமானியன் ஒரு பில்லியன் மக்களுக்கு ஹீரோவான கதை. அந்த கடைசி நாலு நாள் தான் பதிவு போட்டிருக்கிறார். ரொம்ப அசால்டான ( சரி, இயற்கையான) பதிவு. மெடல் வாங்கினதும் எஸ்கேப் ஆகி நண்பர்களோட சாப்பிட போன விஷயம் 'லைட்டா' டச் பண்ணும். http://abhinavbindra.blogspot.com/

பிகு1: இங்க நம்ம ஜெர்மன் நண்பருக்கெல்லாம் அவங்க ஊர் அம்மணி ட்ரைனிங்ல நம்ம ஆள் தங்கம் வாங்கினதால ஒரு மகிழ்ச்சி.

பிகு2: சைலெண்டா இதுக்கு உதவி பண்ணதுல NRI தொழிலதிபர் மிட்டலுக்கும் ஒரு பங்கு. இங்கே

பிகு3: இதே போல் நான் விரும்பிப்படிக்கும் ( படித்த, ஏனோ கொஞ்ச காலமாய் பதிவு இல்லை) இன்னொரு blog , நம்ம இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கருடைய உள்ளூர் கிரிக்கெட்டை பற்றிய Cricinfo blog இங்கே.

Wednesday, August 13, 2008

கடைசி மழைத்துளி..


பல வருடங்களுக்கு முன்னர் என்னிடத்தில் ஒரு புத்தகம் இருந்தது...இன்றும் கோவையில் எங்கோ ஒரு மூலையில் வீட்டில் இருக்கவேண்டும் (அது என்னவோ எங்கள் வீட்டில் புத்தகங்களை தொலைப்பது மிகக்கடினம்). அறிவுமதியின் கவிதைகளின் தொகுப்பு என்று நினைக்கிறேன். "கடைசி மழைத்துளி" என்பது புத்தகத்தின் பெயர், அந்த வாசகம் மட்டும் ஏனோ இன்னும் நினைவில் நிற்கிறது. புத்தகத்தின் உள்ளே அந்த வாசகம் குறித்து எந்த கவிதையும் இல்லாததில் மிகவும் வருந்திய ஞாபகம். புத்தகங்களின் தலைப்பில் ஏனோ எனக்கு எப்போதும் ஒரு அணுக்கருதேடல். தலைப்பை கொண்டு ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்வது பழக்கமாக போய்விட்டது.

இன்று காலை வழக்கம் போல் ஒரு Tram (தொடருந்துப்) பயணம். பல நாள் இந்த 25 நிமிட பயணத்தில் வெறுத்துப்போயிருக்கிறேன். இன்று ஒரு பணி இருந்ததால் நான் வழக்கமாக செல்லும் சமயம் அல்லாமல் 9:30 மணி அளவில் பயணம் தள்ளி போயிற்று. ஒவ்வொரு நேரத்திலும் ஒரு வகையான மக்கள் கலப்பு பயணிக்கிறது. எனது வழக்கமான நேரத்தில் அலுவல் செல்பவர்களால் நிறைந்திருக்கும் வண்டி ஒரு மணி நேரத்தில் கல்லூரி மாணவர்களாலும், Supermarket செல்லும் தள்ளுவண்டி முதியவராலும் நிறைந்த ஒரு பரிணாமம் பெற்று விடுகிறது. ஒவ்வொரு கணமும் உலகத்தின் ஒரு புதிய அவதாரம், அது வேறு உலகம் என்று எங்கோ கால பயணம் (Time Travel) குறித்து படித்த நினைவுண்டு.

இன்று மாணவர்க்கு 'exam' போல. கூட்டமாகவும், தனியாகவும், படித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் பலர். ஜெர்மனிலும், ரஷியனிலும், சைனீசிலும், ஆங்கிலத்திலும் பேச்சு. அதே, டென்ஷனை மறைக்க சொல்லும் மகா மொக்கையான ஜோக்குகள், அதை சரியாக கேட்காவிட்டாலும் சிரித்துவைக்கும் நண்பர் கூட்டம், புத்தகங்களில் மார்க் செய்து படிக்கும் சில பேர், வீட்டிலேயே எல்லாம் படித்துவிட்டு ஒரு நமுட்டுச்சிரிப்போடு உட்கார்ந்திருக்கும் சில பேர், டென்ஷனாக டவுட் கிளியர் செய்து கொள்ளும் சில பேர், சிறு பேப்பர் துண்டுகளில் டிப்ஸ் எழுதிய சில பேர், அதையே பிட்டாக Book செய்து வைத்துக்கொண்ட சில பேர் என்று என்னை கருப்பு-வெள்ளை டார்டாயிஸ் சுருள் போட்டு வருடங்களுக்கு முன்னர் கோவை காந்திபார்க்கில்லிருந்து சித்ரா வரை செல்லும் 36 ஆம் நம்பர் பஸ்சுக்கு இழுத்து சென்றன.

அவினாஷி ரோட்டில் கிட்டத்தட்ட 10-12 கல்லூரிகள் இருந்ததால் பரீட்சை சமயத்தில் வழக்கமாக பின்னிப் பரேடு கிளப்பும் bus கூட கொஞ்சம் அடங்கித்தான் போகும். "மாப்ளே, இந்த Question படிச்சியா", "இது எப்போடா நடத்தினாங்க" ( மாம்ஸ், நாம கட் போட்டுட்டு துள்ளுவதோ இளமை போனமே, அப்போ இருக்கும் என்று வெறுப்பேத்தும் மாப்ளே ஒருபுறம்), "அவன் சரியான மாக்காண்டா, என்ன எழுதனாலும் 20 க்கு மேல போட மாட்டான்", "Choiceல விட்ருவோம்டா", "டேய் மச்சி இதுல முக்கியமான ஒரு 4 Point சொல்லு, நான் அத வெச்சு கதை எழுதிக்கறேன்" ( கஷ்டப்பட்டு வீட்டில் இரவு முழுவதும் உருபோட்டதை வேண்டா வெறுப்பாக சொல்லும் 'படிப்ஸ்' ) , " டேய் இன்ஜினியரிங் டிராயிங் பரீட்சைக்கு Drafter மறந்திட்டு வர, என்ன பெரிய ரௌஸுன்னு நெனப்பா , சரி விடு ஹாஸ்டேல் மக்கள்கிட்ட தேத்திக்கலாம்",

பஸ்ஸில் இருந்து Exam Hall கடைசி நிமிடம் வரை முக்கியமான கேள்விகளை தேடி கண்டுபிடித்து ( இது வரை வாழ்க்கையில் ஒரு முறை கூட படித்த முக்கியமான கேள்விகள் வந்ததே இல்லை, உங்களில் யாரேனும் உலகநாயகன்/கி உண்டா?), இரண்டாம் பெல் அடித்ததும் உள்ளே பெஞ்சில் உட்கார்ந்தால் Examiner பியூனிடம் அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார். இல்லை சனியன் பெல் அடிக்காது. இல்லை Question Paper வந்து சேர்ந்திருக்காது.

அந்த நான்கு நிமிடங்கள், பத்து நாட்கள் முன்னர் Plan போட்டு படித்தவன் துவங்கி, பாதி புக்கை Choice இல் விடத்துணிந்தவன் கடந்து, Pant முழுதும் பிட் வைத்திருப்பவன் வரை எல்லோருடைய கண்ணிலும் தெரியும் - ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பும், தறி ஓடும் கால்களிலும், கடிக்கப்படும் பிறை நகங்களிலும், பெஞ்சில் மும்முரமாக வரையப்படும் ஓவியங்களிலும் - செதுக்கப்பட்ட ஒரு உறைந்த கணம். பேருந்தின் ஆரவார மழை அடங்கி புல்லின் நுனியில் புவியின் ஈர்ப்பால் தனியாக தேங்கிக்கிடக்கும் அந்த கடைசி மழைத்துளியின் தவிப்பும் அதுதானோ...

Tuesday, August 12, 2008

வணக்கம்...வாங்க...

1980 களின் அந்தியில் கோயம்புத்தூர் காந்திபுரம் ஏழாம் வீதி கடைகளின் பெயர்ப்பலகைகள் தான் எனக்கு தமிழ் கற்று தந்தன.

அடுமனையகம்
ஆயுத்த ஆடையகம்
தேனீரகம்

bakery, readymade, டீக்கடை என்று நல்ல தமிழில் இன்னும் வழங்க ஆரம்பிக்காத நாட்கள். தமிழும் அரசியலும் பிணையாத நாட்கள். வருடத்திற்கு ஒரு முறையேனும், ' வாங்க, போங்க, என்னங்க' என்ற கொங்குத்தமிழால் சிலிர்த்து உறைந்த மழை கூட பனிக்கட்டியாக பெய்த நாட்கள்.

மறத்தமிழனுக்கு மரியாதைத்தமிழை கற்றுக்கொடுத்த கோவை. எனக்கு அழகாக பொய் சொல்லக்கற்றுகொடுத்த கோவை. அதைக்கொண்டு முதல் காதலின் சுகம் பயில கற்றுகொடுத்த கோவை. நாற்பது நிமிட பேருந்து பயணங்களில் நட்பை அறிமுகபடுத்திய கோவை. முதன் முதலில் எனக்கு மேடையின் போதையை ஏற்றிய கோவை.

என்னடா இவன் கோவைக்கு இவளோ அடி போடறானே.....எங்க ஊர்லயும்...எனக்கும் இது மாதிரி தானேன்னு பார்க்காதீங்க......சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கம்பம், உசிலம்பட்டின்னு இன்னும் நீங்க எல்லாரும் வளர்ந்த ஊரும் இப்படிதான்...நான் மறுக்கலை...எனக்கு கோவை என்பது ஒரு பழக்கம்....ரொம்ப நாள் பழக்கம்.....நான் மறக்க முடியாத, மறக்க விரும்பாத ஒரு பழக்கம்......காந்திபுரத்திலிருந்து பீளமேடு வரை சைக்கிள் மெதிச்சா பாபநாயக்கன்பாளையம் பெருமாள் கோயில் கிட்ட மேடு வரும், அப்போ அழுத்தி மிதிக்கணும்னா ஒரு ரெண்டு வீதி முன்னால இருந்து மெதுவா போகணும், அப்போதான் கெஸ்ஸு ( மூச்சு) வாங்காதுன்னு தெரியற ஒரு பழக்கம்......பல்லாயிரம் மைல் தாண்டியும் நினைத்தால் புன்னகை தரும் அந்த பழக்கத்திற்கு, அந்த நட்பிற்கு, அந்த கோவைக்கு இந்த முதற் பதிவு சமர்ப்பணம்...